search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி மார்கெட்டில் தற்போது இயங்கிவரும் மீன் சந்தையை படத்தில் காணலாம்.
    X
    காந்தி மார்கெட்டில் தற்போது இயங்கிவரும் மீன் சந்தையை படத்தில் காணலாம்.

    காந்தி மார்க்கெட் பகுதியில் இயங்கும் மீன் சந்தைக்கு ரூ.13 கோடியில் புதிய கட்டிடம் - விரைவில் பணி தொடங்குகிறது

    திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இயங்கும் மீன் சந்தைக்கு ரூ.13 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
    திருச்சி:

    திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் தர்பார் மேடு பகுதியில் உள்ள மீன் சந்தை வளாகத்தில் 40-க்கும் அதிகமான மீன் கடைகள் மற்றும் கோழி, ஆடு இறைச்சிக் கடைகள் உட்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    அங்கு போதிய இடவசதி இல்லாததால் இந்த மீன் சந்தை வளாகம் எப்போதும் மக்கள் கூட்டமாக இருக்கும். இங்கு வருபவர்கள் இருசக்கர, 4 சக்கர வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திச் செல்வதால், அப்பகுதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். மேலும், இந்த மீன் சந்தை பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளது.

    எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.13 கோடி மதிப்பில், 100-க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், தரை மற்றும் முதல் தளத்தில் 150 கடைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஆகையால், தற்போது மீன் சந்தை வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துக் கடைகளையும் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள ஜூப்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக மீன் சந்தை மாற்றப்படுகிறது. ஆனால், அங்கு குறைந்த எண்ணிக்கையிலான கடைகளையே வைக்க முடியும். இதர கடைக்காரர்களுக்கும் மாற்று இடம் கேட்டு வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    காந்தி மார்க்கெட் மீன் சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளதால், அங்குள்ள மீன் கடைகள் அனைத்தும் டைமண்ட் பஜாருக்கும், கோழி மற்றும் ஆடு இறைச்சிக் கடைகள் காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள ஆடு வதைக் கூட வளாகத்துக்கும், பழக்கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் கீழப்புலிவார்டு சாலையில் உள்ள மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி வளாகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

    புதிய கட்டிடத்தின் தரைத் தளத்தில் மீன் விற்பனைக் கடைகளும், முதல் தளத்தில் விற்பனைக் கடைகள் மற்றும் குளிர்பதன வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளன. கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டவுடன் புதிய கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடங்கி, 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×