search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்க வேண்டும்- நாராயணசாமி

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டின் பொது சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு விட்டு அதன் மூலமாக 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.

    பொது சொத்துக்களை தனியார் தாரை வார்ப்பதன் மூலம் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களின் எதிர்காலமும் கேள்விகுறியாகும்.

    பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பலகட்ட போராட்டம் அறிவித்துள்ளன. அதன்படி புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    ரங்கசாமி

    புதுவை சட்டசபை கூட்டத்தொடர் 8 நாட்களில் முடிக்கப்பட்டு உள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சரும், அமைச்சர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்புகள் காங்கிரஸ் ஆட்சியில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டவை.

    அப்போது கவர்னராக இருந்த கிரண்பேடி அரசுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் திட்டங்களை முடக்கினார். நிதி ஆதாரம் வழங்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால், இப்போதைய ஆட்சியாளர்களுக்கு எங்களை குறை கூற அருகதை இல்லை. சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த அனைத்து திட்டங்களையும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் ரேசன் கடைகளை திறக்க முடியாது. புதுவை அரசு கொள்கை எதுவுமில்லாமல் முன்னுக்கு பின் முரணான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசிடம் எவ்வளவு நிதி வந்தது. சட்டசபையில் அறிவித்த திட்டங்களை பட்ஜெட்டில் உள்ள நிதியில் வழங்க முடியுமா.? இதனை முதல்-அமைச்சர் மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

    கொரோனா 3-ம் அலை பரவும் நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளில் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கலாம். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என கவர்னர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே கவர்னர் தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×