என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்கா
    X
    வண்டலூர் பூங்கா

    ஊரடங்கில் தளர்வு- வண்டலூர் பூங்கா இந்த வார இறுதியில் திறப்பு

    வண்டலூர் பூங்காவில் அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தாம்பரம்:

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வண்டலூர் பூங்கா கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் வண்டலூர் பூங்காவும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பூங்கா திறக்கப்படவில்லை. அரசிடம் இருந்து உரிய உத்தரவு கிடைத்ததும் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வண்டலூர் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    தற்போது அனைத்து சிங்கங்களும் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளன. பரிசோதனையில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பார்வைக்காக இந்த வார இறுதியில் வண்டலூர் பூங்காவை திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அப்போது நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படாது.

    இதுதொடர்பாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்கா இந்த வார இறுதியில் திறக்கப்படும். கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட சிங்கங்களை பார்க்க அனுமதி கிடையாது. சுற்றுலா பயணிகளுக்கு நிலையான வழிகாட்டு முறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    ‘சிங்கம் சபாரி’ மூடப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. மேலும் காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் விலங்குகளின் பாதுகாப்பிற்காகவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளும் நல்ல நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×