என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி
    X
    வீராணம் ஏரி

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.46 அடியாக உயர்வு

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.

    தற்போது மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் வரதொடங்கியது. இதன் மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று 1,623 கனஅடி நீர் ஏரிக்கு வந்தது.

    இன்று வீராணம் ஏரிக்கு வரும் நீர்வரத்து சற்று அதிகரித்து 1,844 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.87 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 46.46 அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 32 கனஅடி நீர் ராட்சத குழாய் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து வருகிற 24-ந் தேதி விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×