என் மலர்
செய்திகள்

சைபர் க்ரைம்
சைபர் குற்ற மோசடி குறித்து விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
தேவைகளை வெளியே சொன்னால் தான் பிரச்சினை. அதனால் எந்த காரணத்துக்காகவும் வங்கி கையிருப்பு தொடர்பான விவரங்களை யாருக்கும் சொல்லாதீர்கள் என எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:
தொழில்நுட்ப வளர்ச்சியால் ‘சைபர்’ குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பல நூதன முறைகளை பயன்படுத்தி ‘சைபர்’ குற்றவாளிகள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கிரெடிட், டெபிட் கார்டுகளை புதுப்பிப்பதாக சொல்லி கார்டு எண், சி.வி.வி., எண், ‘ஒன் டைம்‘ பாஸ்வேர்டு போன்ற விவரங்களை கேட்டு வரும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக முதியவர்களை குறிவைத்து அதிக அளவில் அவர்களிடம் கார்டு விவரங்களை வாங்கி அவர்களுக்கு தெரியாமலேயே வங்கி கணக்கில் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க மக்களுக்கு போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் ஓ.டி.பி., மூலமாகவோ, வேறு வகையிலோ மோசடியாக வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டால் உடனே புகார் தெரிவிக்க ‘155260’ என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் ‘சைபர்’ குற்ற மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்கு நிமிடம் அடங்கிய குறும்படம் ‘155260’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அப்போது எஸ்.பி., சசாங் சாய் கூறியதாவது:-
பண மோசடி தொடர்பான புகார்களை அதிகபட்சமாக, 48 மணி நேரத்துக்குள் இந்த எண்ணுக்கு அழைத்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் கூட மீட்க வாய்ப்புள்ளது. உடனடியாக அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம்.
இதுபோன்ற புகார்களுக்கு காவல் நிலையத்திற்கு செல்லாமல் உடனே இந்த எண்ணுக்கு அழைக்கலாம். உங்களின் ஆசைகளை உலகத்துக்கு கூறினால் தவறு கிடையாது. தேவைகளை வெளியே சொன்னால் தான் பிரச்சினை. அதனால் எந்த காரணத்துக்காகவும் வங்கி கையிருப்பு தொடர்பான விவரங்களை யாருக்கும் சொல்லாதீர்கள். விழிப்போடு, கவனமாக இருங்கள். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
Next Story