search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகி அஞ்சலை அம்மாள் உருவப்படத்திற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.
    X
    தியாகி அஞ்சலை அம்மாள் உருவப்படத்திற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது - வானதி சீனிவாசன்

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று கடலூரில் வானதி சீனீவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
    கடலூர் முதுநகர்:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கடலூர் முதுநகரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் விநாயகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் விஜயரங்கன், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, ராணுவ பிரிவு மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பாபு, மாவட்ட துணைத்தலைவர் ஜெனித் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி தலைவர் மீனாட்சி நித்திய சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலை் அம்மாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு தலைவர் ஸ்ரீதர், நிர்வாகி பந்தல் பரசுராமன், மேற்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வேலு வெங்கடேசன் நன்றி கூறினார்.

    இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறி மரியாதை செலுத்தும் விதமாக கடலூர் முதுநகர் தென்னிந்திய ஜான்சிராணி என மகாத்மா காந்தியால் பாராட்டு பெற்ற அஞ்சலை அம்மாள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகிகளின் சுதந்திர வாழ்க்கையை நினைவு கூரும் விதமாகவும், தியாகிகளின் வாழ்க்கை குறிப்பை இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அருங்காட்சியம் அமைக்க வேண்டும். மேலும் அஞ்சலை அம்மாளுக்கு மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமலும், மக்களுக்கு எதுவும் செய்யாமலும் தி.மு.க. அரசு ஏமாற்றுகிறது. இது வேதனைக்குரியதாகும்.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறிப்பிட்ட தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிப்போம். வெள்ளை அறிக்கை என்பது தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு இந்த அரசின் அறிவிப்பாகும்.

    இவ்வாறு அவா் கூறினார்.

    முன்னதாக கடலூர் முதுநகரில் அஞ்சலையம்மாள் வாழ்ந்த வீட்டிற்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அஞ்சலையம்மாளின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
    Next Story
    ×