என் மலர்
செய்திகள்

கலெக்டர் மதுசூதன் ரெட்டி
கிராமப்பகுதிகளில் சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் மதுசூதன் ரெட்டி
அனைத்து அரசு துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கிராமப்பகுதிகளில் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
சிவகங்கை:
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, தமிழ்நாடு ஊரகபுத்தாக்கத் திட்டத்தின் மூலம் கிராமப்பகுதிகளில் பின்தங்கிய வறுமையிலுள்ள மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.
எனவே ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, கதர்கிராமத் தொழில்கள் வாரியம், கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மையம், தாட்கோ போன்ற துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும். மேலும் கிராமப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஏற்ப கிராமப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட திட்டப்பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடித்திட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியும் வறுமையில் உள்ளவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும். எனவே, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்துறை திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்ரன், தொழில் மைய மேலாளர் கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மைய பேராசிரியர் செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






