search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் குணமடைந்தன

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் மற்றும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
    வண்டலூர்:

    கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மே மாதம் 26-ந் தேதி பூங்காவில் உள்ள சில சிங்கங்கள் சோர்வுடன் காணப்பட்டதால், 11 சிங்கங்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 9 வயதுடைய நீலா என்ற பெண் சிங்கம், 12 வயதுடைய பத்மநாபன் என்ற ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் மற்றும் பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 9.7.2021 அன்று பூங்காவில் உள்ள 3 சிங்கங்களுக்கு நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகள் ஆய்வுக்காக விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மாதிரிகளும் ஆய்வு செய்ததில் சார்ஸ் கோவிட்-2 எதிர்மறை நெகட்டிவ் நோய் பாதிப்பு இல்லை என கடந்த 14.7.2021 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 17.7.2021 அன்று பூங்காவில் உள்ள 5 சிங்கங்களின் நாசி மற்றும் மலக்குடல் திரவ மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்ததில் அவை அனைத்துமே (சார்ஸ் கோவிட்-2 வைரஸ்) இல்லை நெகட்டிவ் என்று நேற்று 23.7.2021 தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது. எனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது உள்ள 13 சிங்கங்களும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நல்ல நிலையில் உள்ளன.

    இருந்தபோதிலும் கொரோனா தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு சிங்கங்களின் உடல் நிலையை மிகவும் உன்னிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×