search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 700 பணியாளர்கள்- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

    கிராம பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 400 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகள், காலிமனைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஜூலை முதல் 3 மாதங்கள் மழைக்காலங்கள் என்பதால் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

    எனவே மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கவும் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 60 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பணியாளர்கள் அபேட் கரைசல் ஊற்றுகிறார்கள்.

    இதேபோன்று கிராம பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 400 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து கிராமங்களிலும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டி, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், உடைந்த மண்பானை, தேங்காய்ஓடு உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கினால் அவற்றில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுதல் குறித்து அலட்சியம் காட்டாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 700 பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×