search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கந்தர்வகோட்டை அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

    கந்தர்வகோட்டை அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன்அருகே அரசு துணை சுகாதார நிலையம், பள்ளி கூடம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளன. அதேநேரத்தில் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளன.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால், தஞ்சாவூரிலிருந்து குடிமகன்கள் அதிக அளவில் இந்த கடைக்கு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அதிகமாக கூட்டம் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதுமட்டுமின்றி நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூடி சாவியை முதல்-அமைச்சருக்கு கூரியர் மூலமாக அனுப்புவது என்று முடிவு எடுத்து கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில், இன்னும் சில தினங்களில் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக மனு ஒன்றை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×