search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
    X
    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    6 மாதங்களில் 115 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் திருமணங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோரின் அவசரத்தாலும், பல்வேறு காரணங்களாலும் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குழந்தை திருமணம் சமூகத்தின் அவலம் என்று தெரிந்தும், சிலர் இச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இம்முறை திருமணத்தினால் ஒரு குழந்தையே குழந்தையை பெற்று எடுப்பதால் 23 சதவீதத்துக்கும் அதிகமாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 239 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை என 6 மாதங்களில் 115 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஜனவரி மாதத்தில் 30-ம், பிப்ரவரி மாதத்தில் 20-ம், மார்ச் மாதத்தில் 15-ம், ஏப்ரல் மாதத்தில் 27-ம், மே மாதத்தில் 19-ம், ஜூன் மாதத்தில் நேற்று வரை என 4 குழந்தைகள் திருமணம் தடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழந்தை திருமணம் தடுக்கும் பணியில் சமூக நலத்துறையினர், சைல்டு லைன் அலுவலர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தடுத்து நிறுத்தப்பட்ட திருமணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் சிலரின் பெற்றோரிடம் பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டு தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகளுக்கு தெரிந்தே 115 திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ள நிலையில் தெரியாமல் எத்தனை திருமணங்கள் நடந்தது என்று தெரியவில்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் குழந்தை திருமணம் குறையவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கிராமம் வாரியாக கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×