search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியுடன் பேசும் கலெக்டர் அனீஷ் சேகர்
    X
    சிறுமியுடன் பேசும் கலெக்டர் அனீஷ் சேகர்

    கொரோனாவால் தந்தையை இழந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய மதுரை கலெக்டர்

    கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.
    மதுரை:

    மதுரை தபால் தந்தி நகரைச் சேர்ந்தவர் சோனா. இவரது கணவர் தனுஷ் தீபன். இவர்களுக்கு 9 வயதில் டீடா தீபன் என்ற மகள் உள்ளார்.

    பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த தனுஷ் தீபன் கொரோனா தொற்று காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.

    இதற்கு விண்ணப்பிப்பதற்காக சோனா, மகள் டீடாவுடன் மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

    அப்போது சிறுமி டீடாவுக்கு கலெக்டர் அறையைச் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    எனவே டீடா இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் பாண்டிய ராஜா, சண்முகம் ஆகியோரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து பாண்டிய ராஜா நேர்முக உதவியாளரிடம் அனுமதி கேட்க, கலெக்டர் அனீஷ் சேகர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து சோனா, டீடா ஆகிய 2 பேரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது சிறுமி டீடா “மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்களின் பணி திருப்தி அளிக்கிறதா? பல்வேறு நெருக்கடிகளை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?” என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டார். இதற்கு அனீஷ் சேகர் சிரித்துக்கொண்டே உரிய பதிலை அளித்தார். அப்போது சிறுமி டீடா, “நானும் எதிர்காலத்தில் உங்களைப்போல கலெக்டர் ஆவேன்” என்று தெரிவித்தார்.

    இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனீஷ் சேகர், ''நீங்கள் ஒரு நாள் மதுரை கலெக்டராக வர வேண்டும். அப்போது நான் உங்களை சந்திக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதையடுத்து சோனாவும், டீடாவும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் கலெக்டரின் உணர்வுபூர்வ சந்திப்பு, பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
    Next Story
    ×