search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
    X
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது - அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
    ஜெயங்கொண்டம்:

    தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது என்று அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் வெந்நீர் கருவியை மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அறிவு வழங்கியதை நோயாளிகளின் உபயோகத்திற்காக அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குருவாலப்பர் கோயில், பூவாயிகுளம், சோழங்குறிச்சி, தேவனூர், புதுக்குடி உள்பட 7 இடங்களில் ஓ.என்.ஜி.சி. மூலம் ைஹட்ரோ கார்பன் எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரியலூர் மாவட்டம் உள்ளிட்ட 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதிக்க வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார். விவசாயிகளை பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஜெயங்ெகாண்டத்திலும் இந்த திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சித்த மருத்துவத்தின் படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் நோய் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. எனினும் ஒரு சில கிராமங்களில் உரிய விழிப்புணர்வு இல்லாததால் நோய்த்தொற்று சிறிது அதிகரித்து வருகிறது. அக்கிராமங்களை கண்டறிந்து சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்துவதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் குறித்து கேட்டபோது, தற்போது கொரோனா காலமாக இருப்பதால் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருவதால் நிலக்கரித் திட்டம் குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியின் போது அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர், முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலையை அமைச்சரிடம் வழங்கினார். இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சார்ந்த சிவமுத்துவின் மகன்கள் சிவசர்மா, சிவசுகில் ஆகியோர் தங்களது சேமிப்பு பணத்தை அமைச்சரிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியின்போது ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் தர்மதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ஜெயங்கொண்டம் பாதாள சாக்கடை திட்டம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. நகரப் பகுதிகளில் அனைத்து ஏரிகளிலும் சாக்கடை நீர் கலந்து நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே திறந்த நிலையில் உள்ள சாக்கடைகளை உடனடியாக மூடி அனைத்து சாக்கடை நீரும் ஒரே இடத்தில் சேகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பையும் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×