search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓஎன்ஜிசி
    X
    ஓஎன்ஜிசி

    அரியலூரில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. விண்ணப்பம்

    தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
    அரியலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. இதையடுத்து கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நெடுவாசல் அருகே கருக்காகுறிச்சி வடதெரு பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க
    மத்திய அரசு
    டெண்டர் விட்டது.

    ஹைட்ரோ கார்பன் எடுப்புக்கொள்கையின் கீழ் மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளை சேர்த்ததால் அந்த ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் எந்த பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

    அதற்குள் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நேற்று (15-ந்தேதி) தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    948.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்காக 2004 ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உரிமம் பெற்றது. இந்த பகுதியில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் எனும் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக்கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதில் முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக்கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது.

    கடந்த 13-ந்தேதி ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலம் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்துள்ளபோது அதை மதிக்காமல் இரண்டே நாளில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பூவுலகின் நண்பர்கள் குழு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை பூவுலகின் நண்பர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
    Next Story
    ×