search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்
    X
    முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பாதித்த 2 சிங்கங்கள் கவலைக்கிடம்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    வண்டலூர்:

    சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தமிழக அரசு மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பூங்காவில் உள்ள விலங்குகளை ஊழியர்கள் தொடர்ந்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவில் சிங்கம் உலாவிடும் பகுதியில் இருந்த சில சிங்கங்கள் மிகவும் சோர்வுடனும், உணவு உண்ணாமல் தொடர்ந்து சளி தொந்தரவால் அவதிக்குள்ளாகி இருப்பதை கண்டறிந்து ஊழியர்கள் பூங்கா அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கடந்த மே மாதம் 26-ந்தேதி சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேசம் போபாலில் அமைந்துள்ள நோய்களை கண்டறியும் தேசிய நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கடந்த 3-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அன்றைய தினமே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

    இதையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்ட சிங்கங்களை தனிமைப்படுத்தி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர் ஸ்ரீகுமார் தலைமையில் கால்நடை மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் பூங்கா டாக்டர்கள் இணைந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோப்புப்படம்



    இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. கவலைக்கிடமாக உள்ள இந்த 2 பெண் சிங்கங்களை காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கங்களை தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவ குழுவினர் மிகுந்த எச்சரிக்கையோடு உன்னிப்பாக ஊழியர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் விலங்கு காப்பாளர்கள் கொரோனா கவச உடை அணிந்து மற்ற விலங்குகளுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஒரு பெண் சிங்கம் இறந்ததையடுத்து நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறை தலைவர்) எஸ்.யுவராஜ் நேரில் வந்து கவச உடை அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றியும், மற்ற விலங்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் பூங்கா இயக்குனர் தெபாஷித் மற்றும் மருத்துவ வல்லனர்களிடம் கேட்டறிந்தார்.

    பூங்காவில் பணிபுரியும் 61 சதவீத ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் எப்படி பூங்காவுக்குள் இருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பரவியது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு பூங்கா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×