search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி
    X
    மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி

    முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

    முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
    சிவகங்கை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று(திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிப்பது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே 25.3.2020 முதல், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் நோய்த்தொற்று அதிகளவில் பரவுவதை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கினை இன்று 24-ந்தேதி முதல் மேலும் ஒருவாரகாலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் வினியோகம், குடிநீர் வினியோகம் தடையின்றி நடைபெறும். மேலும் தினசரி பத்திரிகை வினியோகம் செய்ய எந்தவித தடை இல்லை.

    பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள். பழங்கள் ஆகியவைகளை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

    உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும், உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

    முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)சிந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (தேவகோட்டை), மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×