என் மலர்
செய்திகள்

வடகாடு அருகே தண்ணீர் பற்றாக்குறையால் பட்டுப்போன கடலைச்செடிகளை படத்தில் காணலாம்.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாய சாகுபடி குறைந்து வரும் அவலம்
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாய சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.
ஆதனக்கோட்டை:
தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரை நம்பியே அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த சம்பா பருவத்தில் 80 ஆயிரத்து 791 எக்டேர் அளவில் விவசாயிகள் சம்பா நெல்சாகுபடி செய்திருந்தனர். அறுவடை நேரத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் நெல்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது.
வழக்கமா கோடை காலத்தில் விவசாயிகள் அதிக அளவில் நெல்சாகுபடி செய்வார்கள். ஆனால் தற்போது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடிடைய குறைத்துக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பாவைவிட மிக குறைவாக 4 ஆயிரத்து 457 எக்டேர் அளவிற்கு மட்டுமே குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
இதில் புதுக்கோட்டை வட்டாரத்தில் மட்டும் சம்பா சாகுபடியை 2,972 எக்டேர் அளவிற்கு செய்த விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியை சுமார் 100 எக்டேராக குறைத்துள்ளனர். சம்பா சாகுபடியில் மழையினால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியாவது ஏமாற்றத்தை அளிக்காமல் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் கடலை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குறைந்த அளவிலான தண்ணீரை மட்டுமே இறைத்து வருகிறது. இதனால் அனைத்து விவசாய நிலங்களிலும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவுக்கு இப்பகுதிகளில் உள்ள தைலமரக்காடுகளும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தைல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழ்வதால் இப்பகுதிகளில் ஆண்டு தோறும் மழைப்பொழிவும் சராசரியாக குறைந்து வருகிறது. மேலும் ஒருசில நேரங்களில் இப்பகுதிகளில் பெய்யும் மழை நீரும் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களுக்கு செல்ல முடியாமல் வீணாகி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமின்றி தைலமரங்களையும் அழித்து விட்டு பலன் தரும் மரங்களை நட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






