search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    மே 3ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு- புதுவை அரசு அறிவிப்பு

    புதுவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஏற்கனவே 30-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சட்டசபை வாக்கு எண்ணிக்கையையொட்டி கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து வெளியே நடமாடக்கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு செல்ல தடை இல்லை.

    வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் ரேபிட் பரிசோதனை செய்யலாம்.

    இந்த சான்றுகளுடன் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இந்திய தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழ் பெற தன்னுடன் 2 நபர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    கலெக்டர் பூர்வா கார்க்

    இதனிடையே ஊரடங்கு குறித்து கலெக்டர் பூர்வா கார்க் கூறியதாவது:-

    இரவு நேர ஊரடங்கை தவிர்த்து மற்ற நேரங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, உணவு, பழங்கள், பாலகம், மீன், இறைச்சிகடைகள், கால்நடை தீவன கடைகள் திறக்கலாம். சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்கள் செயல் படக்கூடாது. ஓட்டல்களில் உணவுகளை பார்சல் மட்டுமே வழங்கலாம்.

    விடுதிகளில் தங்கியுள்ள விருந்தினர்களின் அறைக்கு சென்றே உணவு வழங்க வேண்டும். டீக்கடை, சிற்றுண்டி கடைகளுக்கு அனுமதியில்லை. மருத்துவ மனைகள், ஆய்வகம், மெடிக்கல் கிளீனிக், மருந்து கடைகள், செய்தித்தாள் விநியோகம், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

    பஸ், ஆட்டோ, டாக்சி பொது வாகன போக்குரவத்து இயங்கலாம். பஸ்களில் நின்று பயணிக்கக்கூடாது. டாக்சியில் டிரைவரை தவிர்த்து 3 பேரும், ஆட்டோ வில் டிரைவரை தவிர்த்து 2 பேரும் பயணிக்கலாம்.

    அனைத்து மத இடங்களும், வழிபாட்டு தலங்களும் மூடப்படும். அவசியமான பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகள் பாதிரியார்கள், கோவில் பணியாளர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மத சபைகள், கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிது.

    கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் இன்றி நடத்தலாம். பெட்ரோல் விற்பனை நிலையம், வங்கிகள், காப்பீட்டு அலுவலகம், ஏ.டி.எம்., தொலை தொடர்பு இணையம் தொடர்பானவை, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், குடிநீர், கேபிள், சுகாதாரம், ஒளிபரப்பு, தனியார் பாதுகாப்பு சேவைகள், போலீஸ், தீயணைப்பு, தேர்தல் தொடர்பான சேவைகள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி செயல்படும். நீதிமன்றங்கள் இயங்க அனுமதிக்கப்படும்.

    திருமண நிகழ்ச்சியில் 50, இறுதி சடங்கில் 25 பேர் பங்கேற்கலாம். தொழில்துறை உற்பத்தி, தொழிற்சாலை இயங்கலாம். அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து பணி செய்யலாம்.

    புதுவையில் விதிமீறல் தொடர்பாக 2 ஆயிரத்து 830 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×