search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.பி.நட்டா
    X
    ஜே.பி.நட்டா

    திமுக - காங்கிரஸ் அப்புறப்படுத்தப்பட வேண்டும்: காரைக்குடியில் ஜே.பி.நட்டா பேச்சு

    'காங்கிரஸ், திமுக ஊழலில் திளைத்த கட்சிகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என காரைக்குடியில் பாஜக தேசியச் செயலாளர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அத்தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

    தமிழ் மொழி உலகின் பழமையான மொழி. அது முழுமையான இலக்கணத்தை உடையது. பிரதமர் மோடி ஐ.நா., சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பேசி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

    தமிழகத்தில் அதிமுக, பாஜக இணைந்து தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க முயற்சிக்கிறது. ஆனால், எதிர்கட்சி குடும்ப அரசியல் செய்ய நினைக்கிறது. அக்கட்சி மூன்றாவது முறையும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    காங்கிரஸ் திமுக ஊழலில் ஊறித் திளைத்தவை. 2 ஜி என்றால் இரண்டு தலைமுறை மாறன் குடும்பம். 3 ஜி என்றால் 3 தலைமுறை கருணாநிதி குடும்பம். 4 ஜி என்றால் காங்கிரஸில் நேரு குடும்பம். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இது மதவாத ரீதியான கூட்டணி. ஆனால் எங்களை மதவாத கட்சி என்கின்றனர். நாங்கள் மதவாத கட்சி கிடையாது.

    திமுகவினர் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தபிறகு எப்படி பேசுவார்கள். திமுக - காங்கிரஸ் ஆகியவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சிகள்.

    காங்கிரஸ் கட்சி உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்கிற கட்சி இல்லை. அவர்கள் ஆட்சியில் தான் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தியது பிரதமர் மோடி தான். தமிழகர்கள் நலனில் மிகுந்த அக்கறைகொண்டது மோடி அரசு.

    டிஎம்கே என்றால் 'டி பார் டைனஸ்டி' அதாவது வாரிசு அரசியல், 'எம் பார் மணி' 'சி பார்' கட்ட பஞ்சாயத்து. இந்த மூன்றையும் பிரதிபலிக்கும் திமுகவை புறக்கணிப்போம். நீண்ட கால பழக்கமுள்ள ஹெச்.ராஜாவை வெற்றி பெற வைப்போம், என்றார். 

    Next Story
    ×