என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுவையில் வேகம் எடுத்த கொரோனா- புதிதாக 128 பேருக்கு தொற்று பாதிப்பு

    புதுவையில் கொரோனா வேகம் எடுத்துள்ளதை நிரூபிக்கும் வகையில் புதிதாக 128 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் பாதிப்பை கொரோனா முறியடித்து வருகிறது. இதனால் தொற்று பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வேகம் எடுத்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 22 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 128 பேருக்கு தொற்று உறுதியானது. 36 பேர் குணமடைந்தனர்.

    கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோர்க்காட்டை சேர்ந்த 72 வயது முதியவர் பலியானார். இதனால் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 680 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 964 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 267 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 579 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 39 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர்.

    2-வது அலையாக பரவி வரும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து கொரோனா தொற்று பாதிப்பு எதுவும் புதுச்சேரியில் இதுவரை பதிவாகவில்லை என்று சுகாதார துறை ஊழியர்கள் தெரிவித்தனர். புதுவையில் நேற்று சுகாதார பணியாளர்கள் 1,012 பேரும், முன்கள பணியாளர்கள் 365 பேரும், பொதுமக்கள் 1,269 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்து 475 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    Next Story
    ×