என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவிக்கு, பாராட்டு சான்றிதழை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.
    X
    மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவிக்கு, பாராட்டு சான்றிதழை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

    100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விருதுநகரில் மினி மாரத்தான் ஓட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி விருதுநகரில் மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவினை வலியுறுத்தி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நேற்று செந்திக்குமார நாடார் கல்லூரியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் தொப்பிகள் அணிந்து செந்திக்குமார நாடார் கல்லூரியில் தொடங்கி மாரத்தான், அரசு தலைமை ஆஸ்பத்திரி, மாரியம்மன் கோவில், தெப்பக்குளம், கருமாதி மடம், புதிய பஸ்நிலையம் வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் சென்று மாவட்ட விளையாட்டு அரங்கினை அடைந்தது.

    இதை தொடர்ந்து மாவட்ட விளையாட்டரங்கில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கண்ணன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×