search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    புதுவையில் ‌‌2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டம்

    புதுவையில் ‌‌2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஊழியர்களின் போராட்டத்துக்கு புதுவை சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த சுகாதார கூட்டு நடவடிக்கை குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

    தேசிய சுகாதார இயக்கக ஊழியர்களுக்கு ஆதரவாக கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தேசிய சுகாதார இயக்க ஊழியர்களுக்கு டெல்லிக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி சம்பளத்துடன் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    சுகாதார துறையில் 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை தேசிய சுகாதார இயக்க ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

    இந்திராகாந்தி அரசு தலைமை பொது மருத்துவ மனையில் போராட்டக்குழு உறுப்பினர் ராஜ்குமார் தலைமையில் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் தலைமை செவிலியர்கள், செவிலியர்கள், பிசியோ தெரபிஸ்ட், பைலேரியா, மலேரியா உதவியாளர்கள், கள பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களும் பங்கேற்றனர்.

    இதேபோல எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இ.எஸ்.ஐ., காசநோய், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல வழி மையம் உள்ளிட்ட அனைத்திலும் சுகாதரத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதியடைந்தனர்.

    Next Story
    ×