என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் கடலூர் வருகை- அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் கடலூர் மாவட்டத்திற்கு வருகிறார் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் சட்டமன்ற தொகுதிசார்பில் அ.தி.மு.க. செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மீனவரணி துணை செயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் கடலூர் மாவட்டத்திற்கு வருகிறார். மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் கடலூர் தொகுதியே, அ.தி.மு.க.வுக்கு நம்பர்-1 தொகுதியாகும். கடந்த 2016 தேர்தலில் 26 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றோம். எனவே, வரும் தேர்தலிலும் நாம் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற வேண்டும். ஊராட்சி தேர்தலில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பதுபோல் தேர்தல் பணியை இன்றே தொடங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தொகுதியில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை, கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்றி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், இணை செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன், விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், நகர துணை செயலாளர் கந்தன் மற்றும் நிர்வாகிகள் தமிழ்செல்வன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.
Next Story






