search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி

    சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை- கலெக்டர் தகவல்

    சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசாணை வந்தவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.
    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜூ, வேளாண்மை இணை இயக்குனர் முருகன், திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதில் பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தண்டராம்பட்டு பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய அணையான சாத்தனூர் அணையில் இருந்து பொதுப்பணித் துறை மூலமாக இந்த ஆண்டு எத்தனை நாட்கள், எவ்வளவு நீர் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கருத்துக்களின் அடிப்படையில் சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    தற்போது விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கையான சிறிய கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு பொதுப்பணித் துறை மூலம் மதிப்பீடு தயார் செய்து ஊரக வளர்ச்சித் துறையின் 100 நாள் வேலை திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய கால்வாய்கள் சீரமைப்பதற்கு பொதுப்பணித் துறை மூலம் மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசாணை வந்தவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாத்தனூர் அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 111.65 அடியாக இருந்தது. சாத்தனூர் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே விநாடிக்கு 250 கன அடி மற்றும் 200 கன அடி வீதம் 90 நாட்களுக்கு இடைவெளி விட்டு தண்ணீர் வழங்கலாம் என திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் முதல் 30 நாட்களுக்கு நேரடி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கவும், திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் சாத்தனூர் அணையிலிருந்து திருக்கோவிலூர் அணைக்கட்டுக்கு மூன்று தவணைகளாக 1200 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கலாம் எனவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×