என் மலர்

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    மதுரையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 105 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 105-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை காலங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 300-க்கு அதிகமான பொதுமக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக மதுரை நகரில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை மாநகராட்சி 4-வது வார்டு பகுதியான எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

    கடந்த மாதம் (ஜனவரி) அதே பகுதியை சேர்ந்த இன்னொரு சிறுவனும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். மேலும் 4 பேர் அரசு ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மதுரையில் எஸ்.ஆலங்குளம், பீபீகுளம் சிம்மக்கல், வில்லாபுரம், மீனாம்பாள்புரம், விளாங்குடி, தத்தனேரி, அகிம்சாபுரம், அழகரடி, கைலாசபுரம், அரசரடி, ஒத்தக்கடை, பொன்மேனி, மாடக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பரவி வருகிறது. இதனால் 105-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதில் பெரும்பாலானோருக்கு டெங்கு அறிகுறி காணப்படுவதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நகர் நல அதிகாரிகள் மதுரை நகரில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை பொது மக்களுக்கு வழங்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல், வாய்க்கால்களில் சாக்கடை தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்தல், ஒவ்வொரு பகுதிகளிலும் கொசு மருந்து அடித்தல், சுகாதார சீர்கேடு ஏற்படும் பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மேலும் வீடுகள் தோறும் சென்று தண்ணீரை பரிசோதிப்பதுடன் அந்த தண்ணீரில் கொசு புழுக்கள் உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். புதர் மண்டிய பகுதிகள் மற்றும் பிற பகுதிகளை சுத்தமாக பராமரிப்பு செய்வதன் மூலம் டெங்கு பரவலை வெகுவாக குறைக்க முடியும்.

    இது தொடர்பாக மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் கூறியதாவது:-

    மதுரையில் ஜனவரி இறுதி வரை மழை நீடித்ததால் டெங்கு பாதிப்பு ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 530 பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள், கொசு புழுக்களை கண்டுபிடித்து அழிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

    மேலும் 85 சுகாதார பணியாளர்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் வார்டு வாரியாக நடத்தப்பட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மதுரை நகரில் டெங்கு பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×