என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் போலீஸ் சங்கீதா-யுவராஜ் திருமணத்தின்போது எடுத்தபடம்.
    X
    பெண் போலீஸ் சங்கீதா-யுவராஜ் திருமணத்தின்போது எடுத்தபடம்.

    செங்கல்பட்டு அருகே பெண் போலீசின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

    செங்கல்பட்டு அருகே பெண் போலீசின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் யுவராஜ் (வயது 24). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்த யுவராஜுக்கும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சங்கீதா என்பவருக்கும் காதல் உருவாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்தை அப்போதைய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா நடத்தி வைத்தார்.

    இந்த நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8-வயதில் குழந்தை இருப்பது தெரியவரவே கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக 2-மாதத்துக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமுதா கணவன், மனைவி இருவரையும் பிரித்து வைத்தார்.

    இதனால் மனமுடைந்த யுவராஜ் ஒரு மாதம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஒழலூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த போது சங்கீதா தான் வேறு இடத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். அங்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த யுவராஜ் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே துத்தநாகம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அக்கம்பக்கத்தினர் யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தன்னுடைய சாவுக்கு காரணம் மனைவி சங்கீதா, சங்கீதாவின் முன்னாள் கணவர் புருஷோத்தமன், பெண் போலீஸ் சந்தியா மற்றும் ஜீவா என்று எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.

    பெண் போலீஸ் சங்கீதாவை கைது செய்யக்கோரி யுவராஜின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்கள் சாலையில் உருண்டபடி அழுது புலம்பினர். இதனால் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு காரணமாக பெண் போலீஸ் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
    Next Story
    ×