என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக்கோரி நாகையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் ஏ.ஐ.டி.யூ.சி.தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.ஐ.டியூ.சி. மாவட்ட செயலாளர் ராமன், தொழிலாளர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நெல் கொள்முதல் செய்வதற்கு சணல், சாக்கு உள்ளிட்ட தளவாட பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். கொள்முதலுக்கான முன்னேற்பாடு பணிகளை விரிவான முறையில் செய்ய வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எடை கூலி, ஏற்று கூலி உள்ளிட்டவைகள் தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வழங்க வேண்டும்.சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி விவரங்களை கையடக்க கருவியில் பதிவு செய்து மாதம் 5-ந் தேதிக்குள் கூலி விவரச்சிட்டு வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து கிடங்குகள் மற்றும் சேமிப்பு நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரித்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×