search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

    இஸ்ரோ சிறந்த திட்டமாக கருதும், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    சென்னை:

    இந்திய விண்வெளி சாதனை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக, முதல்முறையாக தனியார்துறையினர் வடிவமைத்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட இருக்கின்றன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 என்ற ராக்கெட் மூலம் பிப்ரவரி மாதம் இவை ஏவப்படும். இதற்கான ஏற்பாடுகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ செய்து வருகிறது.

    இதை ஒரு சிறந்த திட்டமாக இஸ்ரோ கருதுகிறது. இதன் மூலம் பல தனியார் செயற்கைக்கோள்கள் நாட்டின் சேவைகளுக்காக விண்ணில் அனுப்பப்பட உள்ளன.

    விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தனியார்துறையினர் வடிவமைத்த ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள், சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனிட் சாட் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருக்கின்றன. இவற்றுடன் முதன்மை செயற்கைக்கோளாக, பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான, அமேசோனியா என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

    நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 செயற்கைக்கோளுடன் தலா ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றுடன் உந்துவிசை கருவியும் சேர்த்து விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பணியாற்றுவதற்கான குழுவும் உருவாக்கப்பட்டு பணிகள் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    அதேபோல், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பெரும்பாலான வடிவமைப்புப் பணிகள் முடிந்துவிட்டன. இதுதொடர்பாக நடப்பாண்டு பலவிதமான சோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன. விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டனர். அவர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி, ரஷிய நாட்டில் அளிக்கப்படுகிறது. முதல் ஆளில்லா ககன்யான் செயற்கைக்கோள் திட்டத்தை நடப்பாண்டே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற பெரிய திட்டங்கள், இஸ்ரோவின் மற்ற செயல்பாடுகளைப் பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 25-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் பூமி கண்காணிப்புக்கான 30 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    Next Story
    ×