search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

    சென்னை, காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து பிடிக்கவேண்டும் என மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் தலைமையில், நகர போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் காரைக்கால் கடற்கரை பகுதியில் உள்ள விக்ரம் சாரா பாய் சாலையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படியாக நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதனை ஓட்டிவந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அதிரடிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் நாகை மாவட்டம் சம்மந்தன்பேட்டை அமிர்தாநகரை சேர்ந்த கலைவாணன் மகன் கலைக்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது.

    இவர் காரைக்காலில் 4 மோட்டார் சைக்கிள்கள், சென்னை மெரினா கடற்கரையில் 10 மோட்டார் சைக்கிள்கள் திருடியதாகவும், அந்த மோட்டார் சைக்கிள்களை நாகை, நாகூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்றதாகவும் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, கலைக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் தெரிவித்த தகவலின்பேரில் அவரது வீட்டிலும், அவர் அடையாளம் காட்டிய நபர்களிடம் இருந்தும் 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.

    திருட்டு வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காரைக்கால் போலீசாரை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் பாராட்டினார்.
    Next Story
    ×