search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தொந்தரவு செய்யாதீங்க சார்... தூங்கணும்: சப்-இன்ஸ்பெக்டரை ‘டென்‌ஷன்’ ஆக்கி தவிக்கவிட்ட செல்போன் திருடன்

    சென்னை கீழ்ப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டரிடம் செல்போன் திருடியவன் தூக்கத்தில் போனை எடுத்து, ‘‘தொந்தரவு பண்ணாதீங்க சார்... தூங்கணும்’’ என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டான்.
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிந்து வருபவர் போலீஸ்காரர் தினேஷ்.

    இவர் கீழ்ப்பாக்கம் பர்ணபி சாலையில் கடந்த 9-ந் தேதி நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் இருவரும் சென்னை தலைமைச்செயலகம் அருகில் உள்ள சத்யாநகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், அரவிந்த் என்பதை கண்டுபிடித்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் கீழ்ப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், போலீஸ்காரரிடம் பறித்து செல்லப்பட்ட செல்போனுக்கு இரவில் போன் செய்தார். செல்போன் திருடர்களில் ஒருவரான ராஜேஷ் அதனை எடுத்து பேசினான்.

    தூக்கத்தில் போனை எடுத்த ராஜேஷ், ‘‘தொந்தரவு பண்ணாதீங்க சார்... தூங்கணும்’’ என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் டென்சன் ஆனார். போலீஸ்காரரின் செல்போனை திருடிவிட்டு அதனை சுவிட்ச் ஆப் செய்யாமல் கொள்ளையன் ராஜேஷ் வைத்திருந்தான். சப்-இன்ஸ்பெக்டர் போன் செய்து பேசிய பிறகே சிம்கார்டை கழற்றி வீசி இருக்கிறான்.

    பின்னர் திருடிய செல்போனை பர்மாபஜாரில் வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டான்.

    இதையடுத்து ராஜேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் விரைந்து சென்று ராஜேசையும் அவனது கூட்டாளியான அரவிந்தையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பர்மாபஜாரில் விற்பனை செய்யப்பட்ட செல்போன் மீட்கப்பட்டது.

    கொள்ளை சம்பவத்துக்கு இருவரும் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரரிடம் செல்போனை பறித்துவிட்டு சென்ற ராஜேஷ், சேப்பாக்கம் பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளான். இந்த வீடியோ காட்சியை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.

    அடிபட்ட நபர் யார் என்பதை கண்டுபிடித்து அவரிடம் விசாரித்த போது ராஜேஷ், தன்னிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறி இருக்கிறார். இந்த வீடியோ காட்சியே போலீசுக்கு துப்பு துலக்குவதற்கு உதவியாக இருந்தது.

    Next Story
    ×