search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்த காட்சி.
    X
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்த காட்சி.

    சாக்கோட்டை, கல்லல் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு

    சாக்கோட்டை, கல்லல் ஒன்றிய பகுதியில உள்ள அரசு மருத்துவமனைகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்தார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்றார். அங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவுகளுக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் அங்கு ரத்தஅழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொழுப்பு சத்து கண்டறியும் பரிசோதனை குறித்தும், புறநோயாளிகளுக்கு சரியான காலக்கட்டத்தில் பரிசோதிக்கப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    3 மாதத்திற்கு ஒருமுறை தொடர் நோய் பாதிப்புள்ள நபர்களை சரியாக பரிசோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர பரிசோதனை சரியாக மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்து கொள்வதுடன், பிரசவ காலக்கட்டத்தில் கர்ப்பிணிகளை தீவிர கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்,.

    அதோடு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் உள்ள செவிலியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை குறித்த விவரங்கள் குறித்து பதிவேற்றம் செய்து, சுகாதாரம் குறித்து கண்காணிக்கலாம். இந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை பணியாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்ற முன் வர வேண்டும்.

    மேலும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கும் நிதி உதவியை சரியான காலக்கட்டங்களில் பெற்று வழங்க வேண்டும். பொதுவாக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களை குழுவாக நியமித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் குறித்த இலவச ஆலோசனைகளை வழங்கி பயன்பெற செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து அருகே உள்ள பீர்க்கலைக்காடு,ஒ.சிறுவயல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கண்டனூர், பள்ளத்தூர் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்கள் யசோதாமணி, துணை இயக்குனர் (குடும்ப நலம்) யோகவதி, வட்டார மருத்துவர்கள் ஆனந்த், சதீஷ், சிவசங்கரி, பூச்சியியல் மருத்துவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் முருகேசன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×