என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - புதுமாப்பிள்ளை பலி

    மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    போத்தனூர்:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைவேலு என்பவரது மகன் முத்து மணிகண்டன் (வயது 26). இவர் கோவை அருகே உள்ள சுந்தராபுரம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் ஆனது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிவந்தார். பின்னர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து மணிகண்டன், அதே தனியார் மருத்துவமனையில் பயோமெடிக்கல் என்ஜினீயரிங் வேலை பார்க்கும் தனது நண்பரான முஸ்தக் ஷெரீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம்-மதுக்கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை முஸ்தக் ஷெரீப் ஓட்டினார்.

    அப்போது எதிரே மதுக்கரையில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், முத்து மணிகண்டன் வந்த மோட்டார் சைக்கிளுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதியது. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த புதுமாப்பிள்ளை முத்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவலின் பேரில் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த முஸ்தக் ஷெரீப், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மதுக்கரையை சேர்ந்த விஷ்ணுபிரசாத், பிரவீன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×