என் மலர்
செய்திகள்

மழைநீரில் மூழ்கிய நெற்பயிரை விவசாயி கையில் எடுத்து அமைச்சர் வேலுமணியிடம் காண்பித்த காட்சி
நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் வேலுமணி
நாகை மாவட்டத்தில் மழையால் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நிவர், புரெவி புயல்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் வேலுமணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாகை எம்பி. செல்வராஜ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி (நாகை), பவுன்ராஜ் (பூம்புகார்), பாரதி(சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வேலுமணி பேசுகையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் பார்வையிட உள்ளார் என கூறினார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 பயனாளிகளுக்கு நிவாரண உதவிவழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிகமான மழை பெய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பாதிப்பு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மூலமாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் 191 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 60 ஆயிரத்து 583 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்டத்தில் 1,001 வீடுகள் சேதம் அடைந்துள்ளன, 252 கால்நடைகளும் இறந்துள்ளன. 1 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்சி உள்ளன.
ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் 122 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதியில் இருந்து பொக்லின் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அறையில் இருந்து கொண்டு என்ன செய்தார் என்று அனைவருக்கும் தெரியும். விளம்பரம் தேடுவதற்காக ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து மகிழி, இறையான்குடி, ஆய்மூர் ஆகிய பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story






