search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் திருட்டு வழக்கில் 3 பேர் கைது - தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

    திருப்பூரில் திருட்டு வழக்கில் 3 பேரை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்தும், தூங்கிக் கொண்டிருந்த நபர்களிடம் பணத்தை திருடும் சம்பவங்களும் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இது தொடர்பாக துணை கமிஷனர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் ஆகியோர் மேற்பார்வையில் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பாக திருப்பூர் புதிய பஸ் நிலையம் பழைய நாகமரத் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 33) என்பவரை போலீசார் பிடித்தனர்.

    அவர் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருடியதும், செலவழித்தது போக ரூ.3 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் பாலாஜியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    இதுபோல் இருசக்கர வாகனங்களை திருடிய சம்பவம் தொடர்பாக கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அகிலன் (27) மற்றும் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து கொடுக்க உதவிய இருசக்கர ஒர்க்‌ஷாப் உரிமையாளரான கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி பிஜு (46) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அகிலன் மற்றும் அந்தோணி பிஜு ஆகியோரை வடக்கு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது ‘இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது சாவியை வண்டியில் வைத்து விட்டுச் செல்லக்கூடாது. மேலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள இடங்களில் வாகனத்தை நிறுத்தி செல்ல வேண்டும். வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
    Next Story
    ×