search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையில் ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

    தலைஞாயிறு அருகே டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் ராஜகோபால் என்பவர் மேற்பார்வையாளராகவும், பிச்சைக்கண்ணு, முருகதாஸ், செந்தில்குமார் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர். இவர்கள் விற்பனை முடிந்துநேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு காவலாளி ராஜேந்திரன் என்பவரும் புயல் காரணமாக வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காவலாளி ராஜேந்திரன் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும், தலைஞாயிறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடையில் 3 அட்டை பெட்டியில் இருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், கடையில் இருந்த இன்வெட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம நபர்கள் உடைத்து விட்டு கைவரிசை காட்டி உள்ளனர். சம்பவ இடத்துக்கு நாகையில் இருந்து கொண்டு வரப்பட்ட போலீஸ் மோப்ப நாய் துளிப் திருட்டு போன கடையை சுற்றி வந்து நின்று கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×