search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான்- நாராயணசாமி குற்றச்சாட்டு

    புதுவையில் ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 30 சதவீத மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அகில இந்திய அளவை விட 3 மடங்கு அதிகமாகும். இதனால் புதுவையில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இது பண்டிகை காலம் என்பதால் கொரோனா மறுபடியும் பரவ வாய்ப்புள்ளது. டெல்லி உள்பட பல மாநிலங்களில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுவையை பொறுத்தவரை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மாநிலம் தாங்காது. ஏற்கனவே பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி இல்லை. எனவே பொதுமக்கள் மெத்தனமாக இருக்க கூடாது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். டிரைவரின் சாமர்த்தியமான நடவடிக்கையால் தான் அவர் உயிர் பிழைத்துள்ளார். இதில் மிகப்பெரிய சதி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக முன்னணியில் இருந்து பணி செய்பவர். அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி சிலருக்கு உள்ளது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் பகுதியில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் பின்னணியில் உள்ளனர். ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது புதுவையில் சகஜமாக கொலைகள் நடந்தன. அவரது ஆட்சியின் போது 19 வயது மாணவர் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி ஊசுடு ஏரியில் வீசப்பட்டார். அந்த வழக்கில் தொடர்பு இல்லாதவர்கள் பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கை தோண்டி எடுத்து தற்போது மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    புதுவையில் ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான். அதனை தடுத்து நிறுத்த நாங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் விரோதம் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×