search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதை படத்தில் காணலாம்.
    X
    ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதை படத்தில் காணலாம்.

    கண்ணாடி துண்டுகளுடன் உணவு பரிமாறிய ஓட்டலில் அதிகாரிகள் ஆய்வு - ரூ.10 ஆயிரம் அபராதம்

    வேலூரில் கண்ணாடி துண்டுகளுடன் உணவு பரிமாறிய ஓட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தினர். அதன்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு வீட்டாருக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.

    இரு வீட்டினர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உணவு சாப்பிட்டனர். அப்போது இலையில் கண்ணாடி துகள்கள் மற்றும் துண்டுகள் இருந்தன. இதனை சாப்பிட்ட 6 பேர் பாதிப்படைந்ததாக கூறப்படுகிறது.

    உணவு சமைக்கும்போது சமையல் கூடத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த டியூப்லைட் உடைந்து பாத்திரத்தில் விழுந்துள்ளதை ஓட்டல் நிர்வாகத்தினர் கவனிக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்தியவர்கள் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த ஓட்டலில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ‘திடீர்’ ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓட்டலில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். இதனிடையே சமையல் அறையில் இருந்த டியூப் லைட்களை ஓட்டல் நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டு பிளாஸ்டிக்கால் ஆன மின் விளக்குகளை மாற்றியது.

    மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர். அப்போது ஓட்டலில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் காலாவதியானதாக இருந்தது கண்டறியப்பட்டது. அப்போது அவர்கள் உணவு மாதிரிகளையும் சேகரித்தனர், ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நிர்வாகத்திடம் அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆய்வு செய்து, குறைகள் நிவர்த்தி செய்யாமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×