என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு ரூ.100 அபராதம்

    மாமல்லபுரத்தில் முககவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்காகவும், கடற்கரையில் பொழுதுபோக்குவதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் கம்பிவேலிக்கு வெளிப்புறம் உள்ள அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க தடை இல்லை. இதனால் இந்த புராதன சின்னங்களை பார்க்கவும், கடற்கரையில் பொழுதை கழிக்கவும் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகளும் அதிக அளவில் வருகின்றனர். இப்படி வரும் பயணிகளும், காதலர்களும் முக கவசம் அணியாமல் அலட்சிய போக்குடன் வருவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இவர்கள் மூலம் மாமல்லபுரம் நகர பகுதியில் கொரோனா தொற்று பரவல் அபாயமும் இருந்தது. இதையடுத்து நேற்று மாமல்லபுரம் கடற்கரை சாலை மற்றும் ஐந்துரதம் பகுதியில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் முக கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளையும், கார், அரசு பஸ் மற்றும் வேன்களில் வந்த சுற்றுலா பயணிகளையும் மடக்கி தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்து முககவசம் அணிந்து செல்லுமாறு அறிவுரை வழங்கி, பேரூராட்சி சார்பில் இலவச முககவசம் வழங்கி அனுப்பி வைத்தனர். குறிப்பாக நேற்று முககவசம் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×