என் மலர்
செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரியில் நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி விவசாயி குடும்பத்துடன் தர்ணா
கிருஷ்ணகிரியில் நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
சூளகிரி ஒன்றியம் கிருஷ்ணாபாளையத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 29). விவசாயி. இவர் தனது உறவினர்களுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அங்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவரிடம் கேசவன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு பெற்றோர் இல்லை. நான் எனது சகோதரியுடன் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை என்னுடைய கிராமத்தை சேர்ந்த 11 பேர் போலியாக அவர்களின் பெயர்களுக்கு பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தேன். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் எதிர்தரப்பினர் பத்திர மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலி பத்திரத்தை ரத்து செய்து கொடுப்பதாக போலீசார் முன்பு எழுதி கொடுத்தனர்.
பின்னர் இது சிவில் வழக்கு என்றும் போலீசார் தலையிட கூடாது என்றும் போலீசாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் கடந்த 9 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நில அபகரிப்பு பிரிவில் புகார் அளித்ததால், எங்களை ஊர் நாட்டாமை, பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சமூக புறக்கணிப்பு செய்துள்ளனர்.
மேலும் இந்த சொத்தை எழுதிக் கொடுக்கும்படியும், இல்லையென்றால் எங்களை கொலை செய்துவிடுதாகவும் மிரட்டி வருகின்றனர். எனவே இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (34) திருமணம் ஆகாதவர். நிலப்பிரச்சினை காரணமாக அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பிடுங்கி விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பப்டது.
Next Story






