search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    சுற்றுச்சூழல் பொறியாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி- வேலூர் கோர்ட்டு உத்தரவு

    லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளரின் முன்ஜாமீன் மனுவை வேலூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
    வேலூர்:

    வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் முறைகேடாக பணம் பெற்றதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த மாதம் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள அவரது வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவரிடம் இருந்து ரூ.3 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரம் மற்றும் 3½ கிலோ தங்க நகைகள், 6½ கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவியின் வங்கி லாக்கரில் இருந்தும் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் வேலூர் தலைமை நீதித்துறை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் பன்னீர்செல்வம், தலைமை நீதித்துறை கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்தன், பன்னீர்செல்வத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×