என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள், சேவல்கள்.
    X
    புதுக்கோட்டையில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள், சேவல்கள்.

    புதுக்கோட்டை நாட்டுக்கோழிகளுக்கு கடும் கிராக்கி

    புதுக்கோட்டை நாட்டுக்கோழிகளுக்கு வெளிமாவட்டங்களில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும், விலை சற்று உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    அசைவ உணவுப்பிரியர்களுக்கு நாட்டுக்கோழி இறைச்சி மீது அதிகம் ஆர்வம் உண்டு. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள், சேவல்கள் விற்பனைக்காக சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது.

    புதுக்கோட்டையில் அரசு மகளிர் கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய சாலையோரமாக உயிருடன் நாட்டுக்கோழிகள், சேவல்கள் தினமும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் காணமுடியும். இந்த கோழிகளை பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்கிச்செல்வது உண்டு. ஓட்டல்களில் இறைச்சி உணவாக பயன்படுத்துகின்றனர். பொதுமக்களும் வீடுகள், நிகழ்ச்சிகளில் சமைத்து சாப்பிடுவது உண்டு. இதேபோல மொத்த வியாபாரிகள் சந்தைகளில் இருந்து உயிருடன் நாட்டுக்கோழி, சேவல்களை வாங்கி வந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக மொத்தமாக அனுப்பி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை நாட்டுக்கோழிகள், சேவல்கள் வெளிமாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் விலையும் சற்று அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதம் மற்றும் நவராத்திரி விழா முடிவடைந்த நிலையில் இதன் இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    புதுக்கோட்டை நாட்டுக்கோழிகள், சேவல்களுக்கு தனி மவுசு உண்டு. ருசி அதிகமாக இருக்கும் என்பதால் இதனை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மேய்ச்சலுக்கு கிராமப்புற பகுதியில் தான் இதனை விடுவார்கள். புதுக்கோட்டை, அறந்தாங்கி, கறம்பக்குடி, ஆலங்குடி, வெட்டன்விடுதி உள்ளிட்ட ஊர்களில் நடைபெறும் வாரச்சந்தைகளின் போது விற்பனைக்காக கோழிகளை கொண்டுவருபவர்களிடம் மொத்தமாக வாங்கி வந்து அனுப்புகிறோம். சேவல்களை விட கோழிகளின் விலைதான் சற்று அதிகம். உயிருடன் ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு வெளிமாவட்டங்களுக்கு குறைந்தது ஆயிரம் நாட்டுக்கோழிகள், சேவல்களை அனுப்புகிறோம்.

    புதுக்கோட்டை மாவட்ட நாட்டுக்கோழிகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. ஓட்டல்களில் இதன் இறைச்சி உணவை விற்கும் போது குறிப்பிட்டே விற்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். புதுக்கோட்டையில் மட்டுமல்ல விராலிமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பக்கத்து மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இவ்வாறு கூறினர்.
    Next Story
    ×