search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள துருக்கி நாட்டு வெங்காயம்
    X
    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள துருக்கி நாட்டு வெங்காயம்

    திருப்பூருக்கு 15 டன் துருக்கி வெங்காயம் வந்தது

    பெரிய வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு துருக்கி நாட்டில் இருந்து 15 டன் பெரியவெங்காயம் நேற்று வந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சின்ன, பெரிய வெங்காயம் சில்லரை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு கடந்த மாதம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழை காரணமாக திருப்பூருக்கு வெங்காய வரத்து குறைந்தது. இதேபோல் மராட்டிய மாநில வெங்காய வரத்தும் குறைந்தது.

    இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ. 100-ஐ தாண்டியது. இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக கிலோ ரூ 80, ரூ.90 ஆகிய விலைகளில் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது துருக்கி நாட்டில் இருந்து திருப்பூருக்கு வெங்காயம் வர தொடங்கியுள்ளது. இதுகுறித்து மொத்த வெங்காய வியாபாரி முருகேசன் கூறியதாவது:-

    திருப்பூருக்கு நேற்று 15 டன் துருக்கி நாட்டு வெங்காயம் வந்துள்ளது. கிலோ ரூ. 68-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயமானது கர்நாடகா, மராட்டிய மாநில வெங்காயத்தை விட சற்று காரம் குறைவாக இருப்பதால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இல்லை. கடை, ஓட்டல், பேக்கரிகளுக்கு வாங்கி செல்கின்றனர். இதன் வியாபாரம் சற்று குறைவாக இருந்தாலும், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் வர தொடங்கி உள்ளதால் நம் நாட்டு வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. மொத்த விலையாக நேற்று கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துருக்கி வெங்காயம் இளமஞ்சள் நிறத்திலும், அளவில் பெரிதாகவும் உள்ளன. சில வெங்காயம் 300 கிராம் வரைக்கும் எடை இருக்கின்றது.
    Next Story
    ×