search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி கிடப்பதை படத்தில் காணலாம்.

    வானூர் அருகே லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல்- சிறுமி உள்பட 2 பேர் பலி

    வானூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர்.
    வானூர்:

    வானூர் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஷேர் ஆட்டோ மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    புதுவை மேட்டுப்பாளையத்தில் தனியார் அட்டை கம்பெனி உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அண்ணாநகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகள் அங்காளபரமேஸ்வரி (வயது 14), உதயன் மனைவி ஞானவள்ளி (22), ஸ்ரீமதி (18), பிரபாவதி (20), சிவபுஷ்னம் (33) ஆகியோர் உள்பட 12 பேர் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து இவர்கள் அனைவரும் ஷேர் ஆட்டோவில் கிளியனூருக்கு புறப்பட்டனர். ஷேர் ஆட்டோவை பாப்பாஞ்சாவடியை சேர்ந்த அய்யப்பன் (20) என்பவர் ஓட்டினார். புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் தைலாபுரம் மெயின்ரோடு அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது ஷேர் ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது.

    மோதிய வேகத்தில் ஆட்டோ உருக்குலைந்து போனது. விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்த 12 பெண்கள் படுகாயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையில் காயமடைந்து கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இதில் அங்காளபரமேஸ்வரி, ஞானவள்ளி ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக கிளியனூர் மெயின்ரோடு பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பார்க்க அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் ஜிப்மர் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×