search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    தவறான தகவல்களை தந்து கவர்னர் மக்களை குழப்புகிறார்- நாராயணசாமி ஆவேசம்

    தவறான தகவல்களை தந்து கவர்னர் மக்களை குழப்புகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் மாநில அரசு பரிந்துரைகளை ஏற்காமல் கடந்த 2017-ம் ஆண்டு தன்னிச்சையாக மாணவர்களை சேர்த்தது. அப்போது இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில் தவறு செய்யும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க நான் கடிதம் எழுதினேன்.

    அதே நேரத்தில் தனக்கு வந்த புகாரின் அடிப்படையில் தன்னிச்சையாக கவர்னர் கிரண்பேடி சென்டாக் கலந்தாய்வுக்கு சென்று அதிகாரிகளை மிரட்டினார். சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைத்தார். சி.பி.ஐ. புதுவைக்கு வந்து அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு தர உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    நாணயமான அதிகாரிகளை ஊழல் பேர்வழிகள் என்று சி.பி.ஐ.க்கு புகார் கொடுத்து கவர்னர் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். தற்போது தீர்ப்பை வரவேற்று புதுவை மக்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு என கிரண்பேடி தெரிவிக்கிறார். உண்மையில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதே கிரண்பேடிக்கு நோக்கம்.

    தவறான தகவல்களை தருவது கிரண்பேடிதான். ஆதாரமற்ற புகாரைக் கொடுத்து அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்தார்.

    புதுவை மக்கள் மத்தியில் ஒரு பெரும் குழப்பத்தை கவர்னர் உருவாக்குகிறார். பண்டிகை காலங்களில் ஏழைகளுக்கு துணி, ரேசனில் அரிசி தருவதற்கு பதிலாக பயனாளிகளுக்கு பணம் தர கிரண்பேடி அறிவுறுத்தினார்.

    மத்திய உள்துறையும் இதை செய்ய சொல்கிறது. ரேசனில் அரிசி வழங்குவதை தடுத்து விட்டு ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?ரேசனில் அரிசி தருவதும், ஏழைகளுக்கு பண்டிகை காலங்களில் இலவச துணி தருவதும் அரசின் கொள்கை முடிவு. அதை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை.

    அரிசியை ரேசனில் வழங்குவது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. கவர்னர் மாளிகையான ராஜ் நிவாஸ் என்பது பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமாக மாறி விட்டது. அதேபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    இதனை தொடர்ந்து, ரேசனில் அரிசியும் தரவில்லை. வங்கியில் பணமும் பயனாளிகளுக்கு வழங்க வில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, “வழக்கு முடியும் வரை அரிசிக்கு பதிலாக பணம் வழங்க உள்ளோம்“ என்று குறிப்பிட்டார்.

    கொரோனா தொற்றால் பள்ளிக்கு வந்த மாணவர் பாதிக்கப்பட்டுள்ளாரே.? என்று கேட்டதற்கு, “ஒரு மாணவனுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகுப்பறையை மூடியுள்ளோம். இதர வகுப்புகள் தொடரும்.” என்றார்.

    Next Story
    ×