search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பள்ளிகளை திறப்பது ஏற்புடையதல்ல- அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

    கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் பள்ளிகளை திறப்பது என்பது ஏற்புடையதல்ல என்று புதுவை அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 8-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்து இருப்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

    தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக் குமார்:-

    பாடங்களில் உள்ள சந்தேகங்களை மாணவர்கள் நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே வகுப்புகள் திறக்கப்படுவதாகவும், வருகைப்பதிவு கட்டாயமல்ல என்று அரசு தெரிவித்துள்ளது. அப்புறம் எதற்கு பள்ளிகள் திறப்பு அறிவிப்பு. ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும் போது, அதில் சந்தேகம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளதா? கொரோனாவால் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, பிள்ளைகள் எப்படி தன்னிச்சையாக பாதுகாப்பு முறைகளை கையாள்வார்கள்.

    பள்ளிகளுக்கு வரும் வழியில் கடைகளுக்கோ, வேறு இடங்களுக்கோ செல்ல மாட்டார்கள் என்பதை யார் உறுதி சொல்ல முடியும். பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு சந்தேகம் கேட்க வந்தால் கொரோனா தொற்றாதா? அப்படித் தொற்றினால் அந்த பழியை போடுவதற்காகத் தான் பெற்றோர் அனுமதியை அரசு கேட்கிறதா. தற்போதைய சூழலில் பிள்ளைகளுக்கு தேவையான மடிக்கணினி, இலவச இண்டர்நெட் சேவை போன்றவை பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர உயிரோடு விளையாடும் முடிவுகளை எடுக்கக் கூடாது.

    அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர்:-

    கொரோனா அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு என்பது தொற்றை அதிகரிக்கத்தான் செய்யும். எனவே அரசு தமிழகத்தின் நடைமுறைகளை பின்பற்றி புதுவையில் கொரோனா தாக்கத்தை குறைக்க வேண்டும். பள்ளிகளை திறக்கும் போது வளாகம் மற்றும் வகுப்பறைகள் என்ன நிலையில் இருக்கும் என்பதை அரசு ஆய்வு எதுவும் செய்யவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் அரசு அவசரப்படக் கூடாது. தற்போதைய சூழ்நிலைகளை ஆராய்ந்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு அதன்பின் பள்ளிகளை திறப்பதே சிறந்தது.

    என்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால்:-

    கொரோனா கொடிய நோய். அது வேகமாக பரவி மக்களை பாதிக்கிறது. இதற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் கூட முதலில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தனர். அதன்பின் அந்த முடிவை தள்ளி வைத்து விட்டனர்.

    பள்ளிகள் திறக்கும் போது மாணவ-மாணவிகளிடையே வேகமாக பரவி பாதிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசு இதுபோன்ற சூழ்நிலையில் அவசரப்படாமல் அனைத்து கட்சியினரையும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். தற்போது உள்ள சூழலில் பள்ளிகளை திறப்பது சரி இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஏம்பலம் செல்வம்:-

    புதுவை மாநிலத்தில் விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பது இல்லை. முதல்-அமைச்சர், அமைச்சர்களே சமூக இடைவெளி இல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றால் அவர்களை கட்டுப்படுத்துவது யார்?

    9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை கட்டுப்படுத்துவது எளிதல்ல. தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்பது ஏற்புடையதாக இருக்காது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆலோசிக்கலாம்.

    அ.ம.மு.க. மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன்:-

    தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறந்தால் மாணவர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்குமா என்பது விடை கிடைக்காத கேள்வி. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வரும் வரை ஆன்லைன் வகுப்பு முறையையே கடைபிடிக்க வேண்டும்.

    கொரோனாவை தடுக்க முககவசம், சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் மாணவர்களுக்கு இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இருக்காது. அரசால் மாணவர்களுக்கு பாதுகாப்பும் வழங்க முடியாது. எனவே தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்காமல் இருப்பது நல்லது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×