search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் சங்கிலியால் கைகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்
    X
    விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் சங்கிலியால் கைகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்

    வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

    வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி நாகையில், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அவுரி திடலில் நேற்று மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி தனபாலன் தலைமை தாங்கினார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சேரன், அமைப்பாளர் வேதமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர் பக்கிரிசாமி, நாகை நகர செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் அனைத்தும் வேளாண்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. விளைபொருள்களை கட்டுப்பாடின்றி இருப்பு வைத்து விற்பனை செய்யும் வசதி முழுமையாக பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் விளைபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். சிறு-குறு விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். கள்ளச்சந்தை பெருகும். விவசாயத்தை அழிக்கும் வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் அன்னிய நிறுவனங்களை புகுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கைவிலங்கு போடும் சூழ்நிலை ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்களது கைகளை சங்கிலியால் கட்டி விலங்கு போட்டுக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×