என் மலர்
செய்திகள்

முககவசம்
முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
அரியலூரில் முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் அரியலூர் தாசில்தார் சந்திரசேகரன் அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, வெள்ளாளத் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடைகளில் முககவசம் அணியாமல் இருந்த 9 கடை உரிமையாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் 6 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் முறையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்கள், கடைக்கு வருபவர்கள் என அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இதுபோன்று திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், அவ்வாறு நடைபெற்றால் மட்டுமே விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Next Story






