என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    உலக சுகாதார நிறுவன அதிகாரியுடன் ஆலோசனை- நாராயணசாமி அறிவிப்பு

    உலக சுகாதார நிறுவன அதிகாரி சவுமியா சாமி நாதனிடம் அடுத்த வாரம் ஆலோசனை பெற உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு 31 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக தற்போது குறைந்துள்ளது. அதேபோல் இறப்பு விகிதத்தையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    சர்க்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களை அதிக அளவில் தொற்று பாதிக்கிறது. தொற்று கண்டறிவதில் மக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. இப்போது வீடுவீடாக சென்று பரிசோதனைகள் நடக்கிறது. ஆனால் பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. வீட்டைவிட்டு வெளியே வரவே மறுக்கிறார்கள்.

    புதுவையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதி உள்ளது. சாதாரண படுக்கைகள் 2 ஆயிரத்து 463-ல் 975 காலியாக உள்ளது. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 958-ல் 398 காலியாக உள்ளது. அதேபோல் வெண்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் 132-ல் 43 காலியாக உள்ளது.

    கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் உள்ள படுக்கைகள் அனைத்தையும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்ற உள்ளோம். அகில இந்திய அளவில் குணமடைவோர் விகிதம் 72 ஆக உள்ளது. நமது மாநிலத்தில் அது 75 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதத்தை குறைப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவன அதிகாரி சவுமியா சாமி நாதனிடம் அடுத்த வாரம் ஆலோசனை பெற உள்ளோம்.

    மருத்துவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவர்னரின் ஒத்துழைப்புடன் புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். இருந்த போதிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது.

    விவசாயிகள் விளை பொருட்களை எந்த மாநிலத்திலும் விற்கலாம் என்பது உள்ளிட்ட 3 சட்டங்களை பாராளுமன்றத்தில் பா.ஜனதா கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து பா.ஜனதா கூட்டணியில் உள்ள அகாலிதளம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளார்.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சிறிய விவசாயிகளால் தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரும் முன்பு மாநில அரசுகளை கலந்து மத்திய அரசு பேசியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலை குழுவுக்கு இந்த சட்டத்தை அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×