என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அமைச்சர் ஆதரவாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது

    வில்லியனூரில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலர் மணி என்கிற ராமகிருஷ்ணன் (வயது 45). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் கோவில் நிலம் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த மாதம் 16-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடிகளான பெரியகோட்டக்குப்பத்தை சேர்ந்த ஜமால் (34) உள்பட 6 பேரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான விஜி என்கிற குரங்கு விஜி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஜமாலின் கூட்டாளியான சுல்தான்பேட்டை தவுபிக் ரகுமான் (25) கருவடிக்குப்பம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து சென்று தவுபிக் ரகுமானை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று இல்லை என்பது உறுதியானதால் தவுபிக் ரகுமான் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×