என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  வேலூரில் நேதாஜி மார்க்கெட்டை முழுவீச்சில் சுத்தம் செய்த ஊழியர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அமைந்துள்ள மொத்த, சில்லறை காய்கறி, பூ, பழக்கடைகள் 2 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் இயங்க உள்ளது.
  வேலூர்:

  வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அமைந்துள்ள மொத்த, சில்லறை காய்கறி, பூ, பழக்கடைகள் 2 மாதங்களுக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்க உள்ளது. இதனையொட்டி சேறும் சகதியும், குப்பைகளுமாக கிடந்த மார்க்கெட்டை மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் சுத்தப்படுத்தினர்.

  வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார் பகுதிகளில் வியாபாரிகள், ஊழியர்கள் பலருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த காய்கறி விற்பனை கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லறை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்துக்கும், பூக்கடைகள் ஊரீசு பள்ளி விளையாட்டு மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.

  மேலும் மண்டித்தெருவில் உள்ள அரிசி, பருப்பு, நவதானிய மொத்த விற்பனை கடைகள் கொணவட்டம், மேல்மொணவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. அங்கிருந்த மளிகை, பாத்திரம், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.

  நேதாஜி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி முதல் கடைகளை சுழற்சி முறையில் திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்.

  வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக காய்கறி, பழம், பூக்கடைகள் தொடர்ந்து தற்காலிக மார்க்கெட்டில் இயங்கி வந்தன. பருவமழை காரணமாக வேலூர் நகரில் அடிக்கடி பெய்த மழையில் தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக காணப்படுகிறது. தற்காலிக மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிகளவு காய்கறிகளை சேமித்து வைக்க இடமில்லை. மேலும் தற்காலிக மார்க்கெட்டில் குறைந்த அளவிலான வியாபாரிகள் மட்டுமே கடை வைத்துள்ளனர். எனவே பழையபடி காய்கறி, பூ, பழக்கடைகளை நேதாஜி மார்க்கெட்டில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்கள் பேரமைப்பு, நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேதாஜி மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் வளாகத்தை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கிருமிநாசினி தெளித்து பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. குப்பைகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த பணிகளை 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

  இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “வணிகர் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் பழையபடி இயங்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். அதனால் காய்கறி, பழம், பூக்கடைகள் இன்று முதல் நேதாஜி மார்க்கெட்டில் இயங்கும்” என்று தெரிவித்தனர்.

  Next Story
  ×